குறள் 1246:
கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு.
My heart, false is the fire that burns; thou canst not wrath maintain, If thou thy love behold, embracing, soothing all thy pain
அதிகாரம் - 125 - நெஞ்சொடுகிளத்தல்
மு.வரதராசன் விளக்கம்
என் நெஞ்சே! ஊடியபோது கூடி ஊடல் உணர்த்த வல்ல காதலரைக் கண்டபோது நீ பிணங்கி உணர மாட்டாய்; பொய்யான சினங்கொண்டு காய்கினறாய்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
நெஞ்சே! கூடிக் கலந்து ஊடலை நீக்கும் காதலரைக் கண்டால் ஒரு தடவைகூடப் பிணங்கியறியாத நீ இப்போது அவர் மீது கொள்ளுகிற கோபம் பொய்யானது தானே?
பரிமேலழகர் விளக்கம்
(தலைமகன் கொடுமை நினைந்து செலவு உடன்படாத நெஞ்சினைக் கழறியது.) என் நெஞ்சே, கலந்து உணர்த்தும் காதலர்க்கணடால் புலந்து உணராய் - யான் தம்மொடு புலந்தால் அப்புலவியைக் கலவிதன்னானே நீக்கவல்ல காதலரைக் கண்டால் பொய்யேயாயினும் ஒருகால் புலந்து பின்னதனை நீக்க மாட்டாய்; பொய்க்காய்வு காய்தி - அதுவும் மாட்டாத நீ, இப்பொழுது அவர் கொடியர் எனப் பொய்க் காய்வு காயாநின்றாய், இனி இதனை ஒழிந்து அவர்பாற் செல்லத் துணிவாயாக. ('கலத்தலான்' என்னும் பொருட்டாய்க் 'கலக்க' என்பது திரிந்து நின்றது. அதனான் உணர்த்தலாவது கலவியின்பத்தைக் காட்டி , அதனான் மயக்கிப் புலவிக் குறிப்பினை ஒழித்தல். பொய்க்காய்வு - நிலையில் வெறுப்பு. 'கண்டால் மாட்டாத நீ காணாதவழி வெறுக்கின்றதனால் பயனில்லை' என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
என் நெஞ்சே! நான் அவருடன் ஊடினால் அந்த ஊடலை என்னுடன் கூடி நீக்கவல்ல என் அன்பரைக் கண்டால் பொய்யாகவாவது கொஞ்சம் ஊடிப் பிறகு ஊடலை விட்டுக் கூடமாட்டோம். இப்போது அதையும் விட்டுவிட்டு அவரைக் கொடியவர் எனப் பொய்யாக வெறுப்பது போல் இருக்கின்றாய்; இதை விடுத்து அவரிடம் போயேன்.