குறள் 1247:
காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேன்இவ் விரண்டு.
Or bid thy love, or bid thy shame depart; For me, I cannot bear them both, my worthy heart
அதிகாரம் - 125 - நெஞ்சொடுகிளத்தல்
மு.வரதராசன் விளக்கம்
நல்ல நெஞ்சே! ஒன்று காமத்தை விட்டு விடு; அல்லது நாணத்தை விட்டு விடு; இந்த இரண்டையும் பொறுத்துக் கொண்டிருக்க என்னால் முடியாது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
நல்ல நெஞ்சமே! ஒன்று காதலால் துடிப்பதையாவது விட்டு விடு; அல்லது அதனைத் துணிந்து சொல்ல முடியாமல் தடுக்கும் நாணத்தையாவது விட்டு விடு. இந்த இரண்டு செயல்களையும் ஒரே நேரத்தில் தாங்கிக் கொள்ள என்னால் முடியாது.
பரிமேலழகர் விளக்கம்
(நாண் தடுத்தலின், அச்செலவு ஒழிவாள் சொல்லியது.) நல் நெஞ்சே - நல்ல நெஞ்சே; ஒன்று காமம் விடு - ஒன்றின் நாண் விடமாட்டாயாயின் காம வேட்கையை விடு; (ஒன்று) நாண் விடு - ஒன்றின் அது விடமாட்டாயாயின் நாணினை விடு; இவ்விரண்டு யானோ பொறேன் - அன்றியே இரண்டும் விடாமை நின் கருத்தாயின், ஒன்றற்கொன்று மறுதலையாய இவ்விரண்டனையும் உடன் தாங்கும் மதுகை யான் இலன். ('யானோ' என்னும் பிரிநிலை, 'நீ பொறுப்பினும்' என்பதுபட நின்றது. 'நல்நெஞ்சே' என்றது, இரண்டையும் விடாது பெண்மையை நிலைபெறுத்தலின், 'நல்லை' என்னும் குறிப்பிற்று. 'அது நன்றே எனினும் என் உயிருண்டாதல் சாலாமையின், அதற்கு ஆகின்றிலேன்', என்பதாம். முற்று உம்மை விகாரத்தால் தொக்கது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நல்ல நெஞ்சே! ஒன்று காதல் விருப்பத்தை விடு; அல்லது நாணத்தை விடு; இரண்டையுமே விடமுடியாது என்பது உன் எண்ணம் என்றால், ஒன்றிற்கொன்று வேறுபட்ட இந்த இரண்டையும் சேர்த்துத் தாங்கும் ஆற்றல் எனக்கு இல்லை.