குறள் 1245:

செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்.

O heart, as a foe, can I abandon utterly Him who, though I long for him, longs not for me
அதிகாரம் - 125 - நெஞ்சொடுகிளத்தல்
மு.வரதராசன் விளக்கம்
நெஞ்சே! யாம் விரும்பி நாடினாலும் எம்மை நாடாத அவர் நம்மை வெறுத்து விட்டார் என்று எண்ணிக் கைவிட முடியும‌ோ?
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
நெஞ்சே! நாம் விரும்பினாலும் நம்மை விரும்பி வராத அவர், நம்மை வெறுத்து விட்டார் என நினைத்து அவர் மீது கொண்ட காதலைக் கை விட்டு விட முடியுமா?
பரிமேலழகர் விளக்கம்
இதுவும் அது.) நெஞ்சே - நெஞ்சே; யாம் உற்றால் உறாஅதவர் - யாம் தம்மையுறத் தாம் உறாத நம் காதலரை; செற்றாரெனக் கைவிடல் உண்டோ - வெறுத்தார் என்று கருதிப் புலந்து கைவிட்டிருக்கும் வலி நமக்குண்டோ? இல்லை.(உறுதல் - அன்பு படுதல். 'அவ்வலி யின்மையின் அவர்பால் செல்வதே நமக்குத் தகுவது' என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நெஞ்சே! நான் அவர்மீது அன்பு காட்டியும், என்மீது அன்பு காட்டாத அவரை, நம்மை வெறுத்தவர் என்று எண்ணிக் கைவிடும் உள்ள உறுதி எனக்கு உண்டோ?