குறள் 999:
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்.
To him who knows not how to smile in kindly mirth, Darkness in daytime broods o'er all the vast and mighty earth
அதிகாரம் - 100 - பண்புடைமை
மு.வரதராசன் விளக்கம்
பிறரோடு கலந்து பழகி மகிழ முடியாதவர்க்கு, மிகப் பெரிய இந்த உலகம் ஒளியுள்ள பகற் காலத்திலும் இருளில் கிடப்பதாம்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
நண்பர்களுடன் பழகி மகிழத் தெரியாதவர்களுக்கு உலகம் என்பது பகலில் கூட இருட்டாகத்தான் இருக்கும்.
பரிமேலழகர் விளக்கம்
நகல் வல்லர் அல்லார்க்கு - பண்பின்மையான் ஒருவரோடு கலந்து உள்மகிழ்தல் மாட்டாதார்க்கு; மாயிரு ஞாலம் பகலும் இருட்பாற் பட்டன்று - மிகவும் பெரிய ஞாலம் இருளில்லாத பகற்பொழுதினும் இருளின்கண் கிடந்ததாம். (எல்லாரோடும் கலந்தறியப் பெறாமையின் பண்பிலார்க்கு உலகியல் தெரியாது என்பார், 'உலகம் இருளின்கண் பட்டது' என்றார். 'பாழ்பட்டன்று இருள்' என்று பாடம் ஓதி, 'இருள் நீங்கிற்றன்று' என்று உரைப்பாரும் உளர்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நல்ல பண்பு இல்லாததால் மற்றவர்களுடன் கலந்து பேசி மனம் மகிழும் இயல்பு இல்லாதவர்க்கு, இந்தப் பெரிய உலகம் இருள் இல்லாத பகல் பொழுதிலும் கூட இருளிலே இருப்பது போலவாம்.