குறள் 998:
நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றார் ஆதல் கடை.
Though men with all unfriendly acts and wrongs assail, 'Tis uttermost disgrace in 'courtesy' to fail
அதிகாரம் - 100 - பண்புடைமை
மு.வரதராசன் விளக்கம்
நட்பு கொள்ள முடியாதவராய்த் தீயவைச் செய்கின்றவரிடத்திலும் பண்பு உடையவராய் நடக்க முடியாமை இழிவானதாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
நட்புக்கு ஏற்றவராக இல்லாமல் தீமைகளையே செய்து கொண்டிருப்பவரிடம், நாம் பொறுமை காட்டிப் பண்புடையவராக நடந்து கொள்ளாவிட்டால் அது இழிவான செயலாகக் கருதப்படும்.
பரிமேலழகர் விளக்கம்
நண்பு ஆற்றாராகி நயம் இல செய்வார்க்கும் - தம்மொடு நட்பினைச் செய்யாது பகைமையைச் செய்தொழுவார் மாட்டும்; பண்பு ஆற்றாராதல் கடை - தாம் பண்புடையராய் ஒழுகாமை அறிவு உடையார்க்கு இழுக்காம். (நயம் - ஈரம். சிறப்பு உம்மை அவர் பண்பாற்றாமைக் கிடனாதல் தோன்ற நின்றது. அதனைச் செய்யின், தாமும் அவர் தன்மையராவர் என்பார், 'கடை' என்றார்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
தம்முடன் நட்புச் செய்யாமல் பகைமை கொண்டு தீமையே செய்பவர்க்கும் கூடப் பண்பற்றவராய் வாழ்வது இழுக்கே.