குறள் 984:
கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.
The type of 'penitence' is virtuous good that nothing slays; To speak no ill of other men is perfect virtue's praise
அதிகாரம் - 99 - சான்றாண்மை
மு.வரதராசன் விளக்கம்
தவம் ஓர் உயிரையும் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது, சால்பு பிறருடையத் தீமையை எடுத்துச் சொல்லாத நற்பண்பை அடிப்படையாகக் கொண்டது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
உயிரைக் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது நோன்பு. பிறர் செய்யும் தீமையைச் சுட்டிச் சொல்லாத பண்பைக் குறிப்பது சால்பு.
பரிமேலழகர் விளக்கம்
நோன்மை கொல்லா நலத்தது - பிற அறங்களும் வேண்டுமாயினும், தவம் ஓர் உயிரையும் கொல்லாத அறத்தின் கண்ணதாம்; சால்பு பிறர் தீமை சொல்லா நலத்தது - அது போலப் பிற குணங்களும் வேண்டுமாயினும் சால்பு பிறர் குற்றத்தைச் சொல்லாத குணத்தின் கண்ணதாம். (நலம் என்னும் ஆகுபெயர்ப் பொருள் இரண்டனையும், தலைமை தோன்ற, இவ்விரண்டற்கும் அதிகாரமாக்கிக் கூறினார். தவத்திற்குக் கொல்லா வரம் சிறந்தாற்போலச் சால்பிற்குப் பிறர் குற்றம் சொல்லாக் குணம் சிறந்தது என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
பிற உயிர்களைக் கொல்லாதிருப்பது தனத்திற்கு அழகு; பிறர் குறைகளைப் பேசாதிருப்பது சான்றாண்மைக்கு அழகு.