குறள் 983:
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால் ஊன்றிய தூண்.
Love, modesty, beneficence, benignant grace, With truth, are pillars five of perfect virtue's resting-place
அதிகாரம் - 99 - சான்றாண்மை
மு.வரதராசன் விளக்கம்
அன்பு, நாணம்,ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை, என்னும் ஐந்து பண்புகளும், சால்பு என்பதைத் தாங்கியுள்ள தூண்களாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
அன்பு கொள்ளுதல், பழிபுரிந்திட நாணுதல், உலக ஒழுக்கம் போற்றுதல், இரக்கச் செயலாற்றுதல், வாய்மை கடைப்பிடித்தல் ஆகிய ஐந்தும் சான்றாண்மையைத் தாங்கும் தூண்களாகும்.
பரிமேலழகர் விளக்கம்
அன்பு - சுற்றத்தார் மேலேயன்றிப் பிறர்மேலும் உளதாய அன்பும்; நாண் - பழி பாவங்களின் நாணலும்; ஒப்புரவு-யாவர் மாட்டும் ஒப்புரவு செய்தலும்; கண்ணோட்டம் - பழையார்மேல் கண்ணோடலும்; வாய்மையொடு- எவ்விடத்தும் மெய்ம்மை கூறலும் என; சால்பு ஊன்றிய தூண் ஐந்து - சால்பு என்னும் பாரத்தைத் தாங்கிய தூண்கள் ஐந்து. (எண் 'ஒடு' முன்னவற்றோடும் கூடிற்று. இக்குணங்கள் இல்வழிச் சால்பு நிலைபெறாமையின், இவற்றைத் 'தூண்' என்றார். ஏகதேச உருவகம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
மற்றவரிடம் அன்பு, பழி பாவங்களுக்கு நாணுதல், சேர்த்ததைப் பிறர்க்கும் வழங்கும் ஒப்புரவு, நெடுங்காலப் பழக்கத்தாரிடம் முக தாட்சண்யம், உண்மை பேசுதல் என்னும் ஐந்தும் சான்றாண்மை என்னும் மாளிகையைத் தாங்கும் தூண்கள்.