குறள் 956:
சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும்என் பார்.
Whose minds are set to live as fits their sire's unspotted fame, Stooping to low deceit, commit no deeds that gender shame
அதிகாரம் - 96 - குடிமை
மு.வரதராசன் விளக்கம்
மாசற்ற குடிப் பண்புடன் வாழ்வோம் என்று கருதி வாழ்வோர், வஞ்சனைக் கொண்டு தகுதியில்லாதவற்றைக் செய்யமாட்டார்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
மாசற்ற பண்புடன் வாழ்வதாகக் கருதிக்கொண்டிருப்பவர்கள், வஞ்சக நினைவுடன் தகாத காரியங்களில் ஈடுபடமாட்டார்கள்.
பரிமேலழகர் விளக்கம்
மாசு அற்ற குலம் பற்றி வாழ்தும் என்பார் - வசையற்று வருகின்ற நம் குடிமரபினோடு ஒத்து வாழக் கடவேம் என்ற கருதி அவ்வாறு வாழ்வோர்; சலம் பற்றிச் சால்பு இல செய்யார் - வறுமையுற்றவழியும், வஞ்சனையைப் பொருந்தி, அமைவிலவாய தொழில்களைச் செய்யார். (அமைவின்மை அம் மரபிற்கு ஏலாமை. இவை மூன்று பாட்டானும் அவர் வறுமையுற்ற வழியும் அவ்வியல்பின் வேறுபடார் என்பது கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
குற்றம் இல்லாமல் வரும் தம் குடும்ப மரபோடு வாழ்வோம் என்பவர், வறுமை வந்தபோதும், வஞ்சகம் கொண்டு, பொருந்தாத செயல்களைச் செய்யமாட்டார்.