குறள் 955:
வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இன்று.
Though stores for charity should fail within, the ancient race Will never lose its old ancestral grace
அதிகாரம் - 96 - குடிமை
மு.வரதராசன் விளக்கம்
தாம் பிறர்க்குக் கொடுத்துதவும் வன்மை வறுமையால் சுருங்கிய போதிலும், பழம் பெருமை உடைய குடியில் பிறந்தவர் தம் பண்பிலிருந்து நீங்குவதில்லை.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பழம் பெருமை வாய்ந்த குடியில் பிறந்தவர்கள் வறுமையால் தாக்குண்ட போதிலும், பிறருக்கு வழங்கும் பண்பை இழக்க மாட்டார்கள்.
பரிமேலழகர் விளக்கம்
பழங்குடி - தொன்று தொட்டு வருகின்ற குடியின்கண் பிறந்தார்; வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும் - தாம் கொடுக்கும் பொருள் பண்டையில் சுருங்கியவிடத்தும்; பண்பின் தலைப் பிரிதல் இன்று - தம் பண்புடைமையின் நீங்கார். (தொன்று தொட்டு வருதல்; 'சேர, சோழ, பாண்டியர்' என்றாற்போலப் படைப்புக் காலந்தொடங்கி மேம்பட்டு வருதல்; அவர்க்கு நல்குரவாவது, வழங்குவது உள் வீழ்வது ஆகலின், அதனையே கூறினார்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
தொடர்ந்து வரும் நல்ல குடியில் பிறந்தவர் தம் பொருள் கொடுத்துக் குறைந்துவிட்டபோதும், கொடுக்கும் பண்பிலிருந்து விலகமாட்டார்.