குறள் 890:
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று.
Domestic life with those who don't agree, Is dwelling in a shed with snake for company
அதிகாரம் - 89 - உட்பகை
மு.வரதராசன் விளக்கம்
அகத்தில் உடண்பாடு இல்லாதவருடன் குடிவாழும் வாழ்க்கை, ஒரு குடிசையிற் பாம்போடு உடன்வாழ்ந்தாற் போன்றது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
உள்ளத்தால் ஒன்றுபடாதவர்கள் கூடிவாழ்வது என்பது ஒரு சிறிய குடிலுக்குள் பாம்புடன் இருப்பது போன்று ஒவ்வொரு நொடியும் அச்சம் தருவதாகும்.
பரிமேலழகர் விளக்கம்
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை - மனப் பொருத்தம் இல்லாதாரோடு கூட ஒருவன் வாழும் வாழ்க்கை; குடங்கருள் பாம்பொடு உடன் உறைந்தற்று - ஒரு குடிலுள்ளே பாம்போடு கூட உறைந்தாற் போலும். (குடங்கம் என்னும் வடசொல் திரிந்து நின்றது. இடச்சிறுமையானும் பயிற்சியானும் பாம்பாற் கோட்படல் ஒருதலையாம், ஆகவே, அவ்வுவமையால் இறுதி வருதல் ஒருதலை என்பது பெற்றாம். (இதனான், கண்ணோடாதவரைக் கடிக என்பது கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
மனப்பொருத்தம் இல்லாதவரோடு சேர்ந்து வாழும் வாழ்க்கை, ஒரு குடிசைக்குள்ளே பாம்புடன் சேர்ந்து வாழ்வது போலாகும்.