குறள் 889:
எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாங் கேடு.
Though slight as shred of 'seasame' seed it be, Destruction lurks in hidden enmity
அதிகாரம் - 89 - உட்பகை
மு.வரதராசன் விளக்கம்
எள்ளின் பிளவைப் போன்ற சிறிய அளவு உடையதே ஆனாலும், ஒரு குடியை அழிக்கவல்ல கேடு உட்பகையில் உள்ளதாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
எள்ளின் பிளவுபோன்று சிறிதாக இருந்தாலும் உட்பகையால் பெருங்கேடு விளையும்.
பரிமேலழகர் விளக்கம்
உட்பகை எட்பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும் - அரசனது உட்பகை அவன் பெருமையை நோக்க எள்ளின் பிளவை ஒத்த சிறுமை உடைத்தேயாயினும்; கேடு உள்ளதாம் - பெருமையெல்லாம் அழிய வரும் கேடு அதன் அகத்ததாம். (எத்துணையும் பெரிதாய கேடு, தனக்கு எல்லை வருந்துணையும் எத்துணையும் சிறிதாய உட்பகையுள்ளே அடங்கியிருந்து, வந்தால் வெளிப்பட்டு நிற்கும் என்பதாம். இதனான் அது, சிறிது என்று இகழப்படாது என்பது கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
எள்ளின் பிளவு போல உட்பகை சிறியதாக இருக்கலாம்; என்றாலம் உட்பகை உள்ள கட்சிக்குள்ளேயே அதன் கேடும் இருக்கிறதாம்.