குறள் 885:
உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும்.
Amid one's relatives if hidden hath arise, 'Twill hurt inflict in deadly wise
அதிகாரம் - 89 - உட்பகை
மு.வரதராசன் விளக்கம்
உறவுமுறையோடு உட்பகை உண்டாகுமானால், அது ஒருவனுக்கு இறக்கும் வகையான துன்பம் பலவற்றையும் கொடுக்கும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
நெருங்கிய உறவினருக்கிடையே தோன்றும் உட்பகையானது அவர்களுக்குக் கேடு விளைவிக்கக் கூடிய பல துன்பங்களை உண்டாக்கும்.
பரிமேலழகர் விளக்கம்
உறல் முறையான் உட்பகை தோன்றின் - புறத்து உறவுமுறைத் தன்மையோடு கூடிய உட்பகை அரசனுக்கு உண்டாவதாயின்; இறல் முறையான் ஏதம் பலவும் தரும் - அஃது அவனுக்கு இறத்தல் முறையோடு கூடிய குற்றம் பலவற்றையும் கொடுக்கும். (அவை, புறப்பகைத் துணையாய் நின்றே அது தோன்றாமல் கோறல் முதலிய வஞ்சனை செய்தலும், அமைச்சர் முதலிய உறுப்புக்களைத் தேய்த்தலும் முதலாயின.)
சாலமன் பாப்பையா விளக்கம்
உறவு முறையை உடையவனே ( சொந்தக் கட்சிக்காரனே) உட்பகையானால், அது சாவோடு கூடிய குற்றம் பலவற்றையும் உண்டாக்கும்.