குறள் 884:
மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
ஏதம் பலவும் தரும்.
If secret enmities arise that minds pervert, Then even kin unkind will work thee grievous hurt
அதிகாரம் - 89 - உட்பகை
மு.வரதராசன் விளக்கம்
மனம் திறந்தாத உட்பகை ஒருவனுக்கு உண்டாகுமானால், அது அவனுக்குச் சுற்றம் சிர்படாமைக்கு காரணமான குற்றம் பலவற்றைத் தரும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
மனம் திருந்தாத அளவுக்கு உட்பகை விளைவிக்கும் உணர்வு ஒருவனுக்கு ஏற்பட்டுவிடுமானால், அது அவனைச் சேர்ந்தவர்களையே பகைவராக்கும் கேட்டினை உண்டாக்கி விடும்.
பரிமேலழகர் விளக்கம்
மனம் மாணா உட்பகை தோன்றின் - புறம் திருந்தியது போன்று அகந்திருந்தாத உட்பகை அரசனுக்கு உண்டாவதாயின்; இனம் மாணா ஏதம் பலவும் தரும் -அஃது அவனுக்குச் சுற்றம் வயமாகாமைக்கு ஏதுவாகிய குற்றம் பலவற்றையும் கொடுக்கும். (அவை, சுற்றத்தாரை உள்ளாய் நின்று வேறுபடுத்தலும், அதனால் அவர் வேறுபட்டவழித் தான் தேறாமையும், பின் அவற்றான் விளைவனவும் ஆம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
புறத்தே நட்பானவர் போல் தோன்றி அகத்தே திருந்ததாத உட்பகை உண்டானால், அது நம் சுற்றமும் நம் கட்சிக்காரரும் நம் வசப்படாதிருக்கும்படி பல சிக்கல்களையும் உண்டாக்கும்.