குறள் 876:
தேறனும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்.
Whether you trust or not, in time of sore distress, Questions of diff'rence or agreement cease to press
அதிகாரம் - 88 - பகைத்திறந்தெரிதல்
மு.வரதராசன் விளக்கம்
இதற்கு முன் ஒருவனைப் பற்றி ஆராய்ந்து தெளிந்திருந்தாலும், தெளியாவிட்டாலும் அழிவு வந்த காலத்தில் அவனைத் தெளியாமலும் நீங்காமலும் வாளாவிட வேண்டும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பகைவரைப்பற்றி ஆராய்ந்து தெளிவடைந்திருந்தாலும், இல்லா விட்டாலும் அதற்கிடையே ஒரு கேடு வரும்போது அந்தப் பகைவருடன் அதிகம் நெருங்காமல் நட்புக் காட்டியும் அவர்களைப் பிரிந்து விடாமலேயே பகைகொண்டும் இருப்பதே நலமாகும்.
பரிமேலழகர் விளக்கம்
தேறினும் தேறாவிடினும் - பகவைனை முன் தெளிந்தானாயினும் தெளிந்திலனாயினும்: அழிவின்கண் தேறான் பகான்விடல் - தனக்குப புறத்தொரு வினையால் தாழ்வு வந்துழிக் கூடாது நீக்காது இடையே விட்டு வைக்க. (முன் 'தெளிந்தான் ஆயினும், அப்பொழுது கூடாதொழிக' என்றது,. உள்ளாய் நின்று கெடுத்தல் நோக்கி, 'தெளிந்திலனாயினும் அப்பொழுது நீக்கா தொழிக' என்றது, அவ்வழிவிற்குத் துணையாதல் நோக்கி. இதனான் நொதுமலாக்கற்பாலது கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
ஒருவனது பகையை முன்பே தெரிந்தோ தெரியாமலோ இருந்தாலும், நெருக்கடி வந்தபோது, அவனை நெருங்காமலும் விலக்காமலும் விட்டு விடுக.