குறள் 875:
தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.
Without ally, who fights with twofold enemy o'ermatched, Must render one of these a friend attached
அதிகாரம் - 88 - பகைத்திறந்தெரிதல்
மு.வரதராசன் விளக்கம்
தனக்கு உதவியான துணையே இல்லை, பகையே இரண்டு, தானே ஒருவன் இந் நிலையில் அப் பகைகளில் ஒன்றை இனியத் துணையாகக் கொள்ள வேண்டும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
தனது பகைவர்கள் இரு பிரிவினராக இயங்கும் நிலையில் தனக்குத் துணையாக யாருமின்றித் தனியாக இருப்பவர், அந்தப் பகைவர்களில் ஒருவரைத் துணையாகக் கொள்ள வேண்டும்.
பரிமேலழகர் விளக்கம்
தன்துணை இன்று - தனக்கு உதவும் துணையே எனில் இல்லை; பகை இரண்டு - நலிவு செய்யும் பகையோ எனின் இரண்டு; ஓருவன்தான் அவற்றின் ஒன்று இன்துணையாக் கொள்க - அங்ஙனமாய் நின்றவழி, ஒருவனாகிய தான் அப்பகை இரண்டனுள் பொருந்தியது ஒன்றை அப்பொழுதைக்கு இனிய துணையாகச் செய்து கொள்க. (பொருந்தியது - ஏனையதனை வேறற்கு ஏற்றது. அப்பொழுது - அவ்வெல்லும் பொழுது. திரிபின்றாகச் செய்துகொள்க என்பார், 'இன்துணையா' என்றார். ஆல்கள்: அசை. இவை இரண்டு பாட்டானும் நட்பாக்கற்பாலது கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
தமக்கோ உதவும் நண்பர் இல்லை; தம்மைப் பகைப்பவரோ இருவர்; அப்போது தனியாக இருக்கும் ஆட்சியாளர், தம்மைப் பகைக்கும் இருவருள் ஒருவனை இனிய நட்பாக மாற்றிக் கொள்க.