குறள் 871:
பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற்று அன்று.
For Hate, that ill-conditioned thing not e'en in jest Let any evil longing rule your breast
அதிகாரம் - 88 - பகைத்திறந்தெரிதல்
மு.வரதராசன் விளக்கம்
பகை என்று சொல்லப்படும் பண்பு இல்லாத தீமையை ஒருவன் சிறிதும் பொழுது போக்கும் விளையாட்டாகவும் விரும்புதலாகாது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பகை உணர்வு என்பது பண்புக்கு மாறுபாடானது என்பதால் அதனை வேடிக்கை விளையாட்டாகக்கூட ஒருவன் கொள்ளக் கூடாது.
பரிமேலழகர் விளக்கம்
பகை என்னும் பண்பு இலதனை - பகை என்று சொல்லப்படும் தீமை பயப்பதனை; ஒருவன் நகையேயும் வேண்டற்பாற்று அன்று - ஒருவன் விளையாட்டின் கண்ணேயாயினும் விரும்புதல் இயற்கைத்தன்று. (மாணாத பகையை ஆக்கிக் கோடல் எவ்வாற்றானும் தீமையே பயத்தலின், 'பண்பிலது' என்றும், அதனை விளையாட்டின்கண் வேண்டினும் செற்றமே விளைந்து மெய்யாம் ஆகலின், 'நகையேயும்' என்றும், வேண்டாமை தொல்லையோரது துணிவு என்பார் நீதி நூல் மேல் வைத்தும் கூறினார். அப்பெயர் அவாய் நிலையான் வந்தது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
பகை எனப்படும் பண்பற்ற ஒன்று, விளையாட்டிலும் கூட் விரும்பத்தக்கது அன்று.