குறள் 870:

கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தொளி.

The task of angry war with men unlearned in virtue's lore Who will not meet, glory shall meet him never more
அதிகாரம் - 87 - பகைமாட்சி
மு.வரதராசன் விளக்கம்
கல்வி கற்காதவனைப் பகைத்துக்கொள்ளும் எளிய செயலைச் செய்ய இயலாத ஒருவனிடம் எக்காலத்திலும் புகழ் வந்து பொருந்தாது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
போர்முறை கற்றிடாத பகைவர்களைக்கூட எதிர்ப்பதற்குத் தயக்கம் காட்டுகிறவர்கள், உண்மையான வீரர்களை எப்படி எதிர்கொள்வார்கள் எனக் கேலிபுரிந்து, புகழ் அவர்களை அணுகாமலே விலகிப் போய்விடும்.
பரிமேலழகர் விளக்கம்
கல்லான் வெகுளும் சிறுபொருள் ஒல்லானை - நீதிநூலைக் கல்லாதானோடு பகைத்தலான் வரும் எளிய பொருளை மேவாதானை; எஞ்ஞான்றும் ஒளி ஒல்லாது - எஞ்ஞான்றும் புகழ் மேவாது. (சிறு பொருள் - முயற்சி சிறிதாய பொருள். நீதி அறியாதானை வேறல் எளிதாயிருக்கவும், அது மாட்டாதானை வெற்றியான் வரும் புகழ் கூடாது என்பதாம், ஆகவே இச்சிறிய முயற்சியாற் பெரிய பயன் எய்துக என்றவாறாயிற்று. இதற்குப் பிறரெல்லாம் அதிகாரத்தோடு மாறாதன் மேலும் ஒரு பொருள் தொடர்பு படாமல் உரைத்தார். இவை மூன்று பாட்டானும் அதனினாய பயன் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நீதி நூல்களைக் கல்லாதவனைப் பகைப்பதால் கிடைக்கும் பொருள் சிறிது எனினும், அதை விரும்பாத அரசுக்கு ஒருபோது் புகழ் சேராது.