குறள் 862:
அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு.
No kinsman's love, no strength of friends has he; How can he bear his foeman's enmity
அதிகாரம் - 87 - பகைமாட்சி
மு.வரதராசன் விளக்கம்
ஒருவன் அன்பு இல்லாதவனாய், அமைந்த துணை இல்லாதடனாய், தானும் வலிமை இல்லாதவனாய் இருந்தால், அவன் பகைவனுடைய வலிமையை எவ்வாறு ஒழிக்க முடியும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
உடனிருப்போரிடம் அன்பு இல்லாமல், வலிமையான துணையுமில்லாமல்,தானும் வலிமையற்றிருக்கும்போது பகையை எப்படி வெல்ல முடியும்?
பரிமேலழகர் விளக்கம்
அன்பு இலன் - ஒருவன் தன் சுற்றத்தின்மேல் அன்பிலன்; ஆன்ற துணை இலன் - அதுவேயன்றி வலிய துணையிலன்; தான் துவ்வான் - அதன் மேல் தான் வலியிலன் : ஏதிலான் துப்பு என்பரியும் - அப்பெற்றியான்மேல் வந்த பகைவன் வலியினை யாங்ஙனம் தொலைக்கும்? (சுற்றமும் இருவகைத் துணையும் தன்வலியும் இலனாகலின், அவன்மேற் செல்வார்க்கு வலி வளர்வதன்றித் தொலையாது என்பதாம். துவ்வான் - துவ்வினைச் செய்யான்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
மக்களிடத்தில் அன்பு இல்லாத, வலுவான துணையும் இல்லாத, ஆற்றலும் அற்ற அரசின்மீது ஆற்றல் மிக்க பகை வந்தால், அப்பகையின் வலிமையை எப்படி அழிக்க முடியும்?