குறள் 861:
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை.
With stronger than thyself, turn from the strife away; With weaker shun not, rather court the fray
அதிகாரம் - 87 - பகைமாட்சி
மு.வரதராசன் விளக்கம்
தம்மை விட வலியவர்க்கு மாறுபட்டு எதிர்த்தலை விட வேண்டும், தம்மை விட மெலியவர் மேல் பகைக் கொள்வதை விடாமல் விரும்பி மேற்கொள்ள வேண்டும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
மெலியோரை விடுத்து, வலியோரை எதிர்த்துப் போரிட விரும்புவதே பகைமாட்சி எனப் போற்றப்படும்.
பரிமேலழகர் விளக்கம்
வலியார்க்கு மாறு ஏற்றல் ஓம்புக - தம்மின் வலியார்க்குப் பகையாய் எதிர்தலை ஒழிக; மெலியார்மேல் பகை ஓம்பா மேக - ஏனை மெலியார்க்குப் பகையாதலை ஒழியாது விரும்புக. ('வலியார்' என்புழித் துணை வலியும் அடங்கலின், 'மெலியார்' என்புழித் துணை வலியின்மையும் கொள்ளப்படும். அத்துணைதான் படை பொருள் முதலிய வேற்றுமைத் துணையும், நல்லறிவுடைமை நீதிநூல்வழி ஒழுகல் முதலிய ஒற்றுமைத் துணையும் என இரண்டாம். அவ்விரண்டும் இல்லாரை வெல்வார்க்கு வலி தொலையாமையின் அவரோடு பகைத்தல் விதிக்கப்பட்டது. சிங்கநோக்காகிய இதனுள் பகை மாட்சி பொதுவகையால் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
பகைவர் நம்மிலும் வலியர் என்றால் அவரை எதிர்ப்தைத் தவிர்த்து விடுக; மெலியர் என்றால் உடனே எதிர்த்துச் செல்க.