குறள் 845:
கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்.
If men what they have never learned assume to know, Upon their real learning's power a doubt 'twill throw
அதிகாரம் - 85 - புல்லறிவாண்மை
மு.வரதராசன் விளக்கம்
அறிவில்லாதவர் தாம் கற்காத நூல்களை கற்றவர் போல் மேற்கொண்டு நடத்தல், அவர் குற்றமறக் கற்றுவல்ல பொருளைப் பற்றியும் மற்றவர்க்கு ஐயம் உண்டாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
அறிந்து கொள்ளாதவைகளையும் அறிந்தவர் போல ஒருவர் போலித்தனமாகக் காட்டிக் கொள்ளும் போது, அவர் ஏற்கனவே எந்தத் துறையில் திறமையுடையவராக இருக்கிறாரோ அதைப் பற்றிய சந்தேகமும் மற்றவர்களுக்கு உருவாகும்.
பரிமேலழகர் விளக்கம்
கல்லாத மேற்கொண்டு ஒழுகல் - புல்லறிவாளர் தாம் கல்லாத நூல்களையும் கற்றாராகத் தாம் மேலிட்டுக் கொண்டு ஒழுகுதல்; கசடு அற வல்லதூஉம் ஐயம் தரும் - கசடறக் கற்றதொரு நூலுண்டாயின் அதன்கண்ணும் பிறர்க்கு ஐயத்தை விளைக்கும். (வல்லது என ஏழாவது இறுதிக்கண்தொக்கது, 'உண்டாயின்' என்பது அவாய் நிலையான் வந்தது. ஐயம், 'அது வல்லர் என்பதூஉம் இவ்வாறு கொல்லோ' என்பது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
அறிவற்றவர், தாம் படிக்காத நூல்களையும் படித்தவர் போலப் பேசிச்செயற்படுவது, அவர் உணமையிலேயே நன்கு அறிந்த நூல்களின் மேலும் சந்தேகத்தைப் பிறர்க்கு உண்டாக்கும்.