குறள் 844:

வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு.

What is stupidity? The arrogance that cries, 'Behold, we claim the glory of the wise.'
அதிகாரம் - 85 - புல்லறிவாண்மை
மு.வரதராசன் விளக்கம்
புல்லறிவு என்று சொல்லப்படுவது யாது என்றால் யாம் அறிவுடையேம் என்று ஒருவன் தன்னைத்தான் மதித்துகொள்ளும் செருக்காகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஒருவன் தன்னைத்தானே அறிவுடையவனாக மதித்துக் கொள்ளும் ஆணவத்திற்குப் பெயர்தான் அறியாமை எனப்படும்.
பரிமேலழகர் விளக்கம்
வெண்மை எனப்படுவது யாது எனின் - புல்லறிவுடைமை என்று சொல்லப்படுவது யாது என்று வினவின்; யாம் ஒண்மை உடையம் என்னும் செருக்கு - அது தம்மைத் தாமே யாம் நல்லறிவுடையம் என்று நன்கு மதிக்கும் மயக்கம். (வெண்மையாவது அறிவு முதிராமை. ஒண்மை எனக் காரியப் பெயர் காரணத்திற்காயிற்று. உலகத்தார் இகழ்தல் அறிந்து வைத்தும் அவ்வாறு மதித்தலான், 'மயக்கம்' என்றார்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
அறிவின்மை என்று சொல்லப்படுவது என்ன என்று கேட்டால், அது தம்மைத் தாமே நல அறிவு உடையவரென்று என்னும் மயக்கமே ஆகும்.