குறள் 824:
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்.
'Tis fitting you should dread dissemblers' guile, Whose hearts are bitter while their faces smile
அதிகாரம் - 83 - கூடாநட்பு
மு.வரதராசன் விளக்கம்
முகத்தால் இனிமையாகச் சிரித்துப் பழகி அகத்தில் தீமை கொண்டுள்ள வஞ்சகருடன் நட்பு கொள்வதற்கு அஞ்ச வேண்டும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
சிரித்துப் பேசி நம்மைச் சீரழிக்க நினைக்கும் வஞ்சகரின் நட்புக்கு அஞ்சி ஒதுங்கிட வேண்டும்.
பரிமேலழகர் விளக்கம்
முகத்தின் இனிய நகாஅ அகத்து இன்னா வஞ்சரை - கண்டபொழுது முகத்தால் இனியவாகச் சிரித்து எப்பொழுதும் மனத்தால் இன்னாராய வஞ்சரை; அஞ்சப்படும் - அஞ்சல் வேண்டும். (நகையது வகை பற்றி 'இனிய' என்றும், அகத்துச் செற்றம் நிகழவும் அதற்கு மறுதலையாய நகையைப் புறத்து விளைத்தலின் 'வஞ்சர்' என்றும், அச்செற்றம் குறிப்பறிதற் கருவியாய முகத்தானும் தோன்றாமையின் 'அஞ்சுதல் செய்யப்படும்' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் குற்றத்திற்கு ஏதுவாய அவர் கொடுமை கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நாம் காணும்போது முகத்தால் இனிதாகச் சிரித்து, மனத்தால் எப்போதும் பகைவராய் வாழும் வஞ்சகர்களுக்கு அஞ்சவேண்டும்.