குறள் 823:
பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
ஆகுதல் மாணார்க் கரிது.
To heartfelt goodness men ignoble hardly may attain, Although abundant stores of goodly lore they gain
அதிகாரம் - 83 - கூடாநட்பு
மு.வரதராசன் விளக்கம்
பல நல்ல நூல்களைக் கற்றுத் தேர்ந்த போதிலும், அவற்றின் பயனாக நல்ல மனம் உடையவராகப் பழகுதல், (உள்ளன்பினால்) மாட்சியடையாதவர்க்கு இல்லை.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
அரிய நூல்கள் பலவற்றைக் கற்றிருந்த போதிலும், பகையுணர்வு படைத்தோர் மனம் திருந்தி நடப்பதென்பது அரிதான காரியமாகும்.
பரிமேலழகர் விளக்கம்
நல்ல பல கற்றக் கடைத்தும் - நல்லன பல நூல்களைக் கற்ற விடத்தும்; மனம் நல்லர் ஆகுதல் மாணார்க்கு அரிது - அதனான் மனம் திருந்தி நட்பாதல் பகைவர்க்கு இல்லை. (நல்லன - மனக் குற்றம் கெடுப்பன. 'மனம் நல்லர்' எனச் சினைவினை முதன்மேல் நின்றது. நல்லர் ஆகுதல் - செற்றம் விடுதல். 'உள்ளே செற்றமுடையாரைக் கல்வியுடைமை பற்றி நட்பு என்று கருதற்க' என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
மனத்தால் பொருந்தாதவர்கள் நல்ல பல நூல்களைக் கற்றபோதும் மனந்திருந்தி நல்ல நண்பர் ஆவது அரிது.