குறள் 821:

சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு.

Anvil where thou shalt smitten be, when men occasion find, Is friendship's form without consenting mind
அதிகாரம் - 83 - கூடாநட்பு
மு.வரதராசன் விளக்கம்
அகத்தே பொருந்தாமல் புறத்தே பொருந்தி நடப்பவரின் நட்பு, தக்க இடம் கண்டபோது எறிவதற்கு உரிய பட்டையாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
மனதார இல்லாமல் வெளியுலகிற்கு நண்பரைப்போல் நடிப்பவரின் நட்பானது, ஒரு கேடு செய்வதற்குச் சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது இரும்பைத் துண்டாக்கத் தாங்கு பலகை போல் இருக்கும் பட்டடைக் கல்லுக்கு ஒப்பாகும்.
பரிமேலழகர் விளக்கம்
நேரா நிரந்தவர் நட்பு - கூடாதிருந்தே தமக்கு வாய்க்கும் இடம் பெறுந்துணையும் கூடியொழுகுவார் நட்பு; சீர் இடம் காணின் எறிதற்குப் பட்டடை - அது பெற்றால் அற எறிதற்குத் துணையாய பட்டடையாம். (எறியும் எல்லை வாராமுன் எல்லாம் தாங்குவது போன்றிருந்து வந்துழி அற எறிவிப்பதாய பட்டடைக்கும் அத்தன்மைத்தாய நட்பிற்கும் தொழிலொப்புமை உண்மையான்,அதுபற்றி அந்நட்பினைப் பட்டடையாக உபசரித்தார். 'தீர்விடம்'என்று பாடம் ஓதி, 'முடிவிடம்' என்று உரைப்பாரும்உளர்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
மனத்தால் நம்மை விரும்பாமல், தமக்கான வாய்ப்பை எதிர்நோக்கி நம்முடன் பழகுபவரின் நட்பானது, பொருளைத் தாங்குவதுபோல் தோன்றினாலும் பொருளை வெட்டி எறிவதற்குத் துணை செய்யும் பட்டடை போன்றது.