குறள் 820:
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு.
In anywise maintain not intercourse with those, Who in the house are friends, in hall are slandering foes
அதிகாரம் - 82 - தீ நட்பு
மு.வரதராசன் விளக்கம்
தனியே வீட்டில் உள்ளபோது பொருந்தியிருந்து, பலர் கூடிய மன்றத்தில் பழித்து பேசுவோரின் நட்பை எவ்வளவு சிறிய அளவிலும் அணுகாமல் விட வேண்டும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
தனியாகச் சந்திக்கும் போது இனிமையாகப் பழகி விட்டுப் பொது மன்றத்தில் பழித்துப் பேசுபவரின் நட்பு, தம்மை அணுகாமல் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்.
பரிமேலழகர் விளக்கம்
மனைக்கெழீஇ மன்றில் பழிப்பார் தொடர்பு - தனியே மனைக்கண் இருந்துழி நட்பாடிப் பலரோடு மன்றின்கண் இருந்து பழி கூறுவார் நட்பு; எனைத்தும் குறுகுதல் ஓம்பல் - சிறிதாயினும் தம்மை நணுகுதலைப் பரிகரிக்க. (மனைக்கண் கெழுமலும் மன்றின்கண் பழித்தலும் தீது ஆகலின், அவர் ஒருகாலும் தம்மை நணுகா வகை குறிக்கொண்டு காக்க என்பார், அவர் நட்பின்மேல் வைத்துக் கூறினார். இவை இரண்டு பாட்டானும் வஞ்சர் நட்பின் தீமை கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நம் வீட்டுக்குள் வந்து நட்புக் கொண்டாடிப் பலர் இருக்கும் சபையில் நம்மைப் பழிப்பவரின் தொடர்பைச் சிறிதளவும் சேரவிட வேண்டா.