குறள் 802:
நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன்.
Familiar freedom friendship's very frame supplies; To be its savour sweet is duty of the wise
அதிகாரம் - 81 - பழைமை
மு.வரதராசன் விளக்கம்
நட்பிற்க்கு உறுப்பாவது நண்பனுடைய உரிமைச் செயலாகும், அந்த உரிமைச் செயலுக்கு உடன்பட்டவராதல் சான்றோரின் கடமையாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பழைமையான நண்பர்களின் உரிமையைப் பாராட்டுகிற சான்றோர்க்குரிய கடமைதான் உண்மையான நட்புக்கு அடையாளமாகும்.
பரிமேலழகர் விளக்கம்
நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை - நட்பிற்கு அவயவமாவன நட்டார் உரிமையால் செய்வன; அதற்கு உப்பாதல் சான்றோர் கடன் - அதனால் அவ்வுரிமைக்கு இனியராதல் அமைந்தார்க்கு முறைமை. (வேறன்மை தோன்ற 'உறுப்பு' என்றார். உறுப்பு என்பது ஈண்டு இலக்கணையடியாக வந்த குறிப்புச் சொல். அவயவமாதல் அறிந்தே இனியவராவர் என்பது தோன்றச் சான்றோர்மேல் வைத்தார்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நண்பர்கள் உரிமையுடன் செய்வதே நட்பிற்கு உறுப்பாகும். அவ்வுரிமையை எண்ணி மகிழ்வதே சான்றோர்க்கு நீதியாகும்.