குறள் 801:

பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.

Familiarity is friendship's silent pact, That puts restraint on no familiar act
அதிகாரம் - 81 - பழைமை
மு.வரதராசன் விளக்கம்
பழைமை என்று சொல்லப்படுவது எது என்று வினாவினால் அது பழகியவர் உரிமைப் பற்றிச் செய்யும் செயலைக் கீழ்ப்படுத்தாமல் ஏற்கும் நட்பாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பழைமை பாராட்டுவது என்னவென்றால், பழகிய நண்பர்கள், தங்களின் உறவை அழியாமல் பாதுகாப்பதுதான்.
பரிமேலழகர் விளக்கம்
பழைமை எனப்படுவது யாது எனின் - பழைமை என்று சொல்லப்படுவது யாது என்று வினவின்; கிழமையை யாதும் கீழ்ந்திடா நட்பு - அது பழைமையோர் உரிமையால் செய்வனவற்றைச் சிறிதும் சிதையாது அவற்றிற்கு உடம்படும் நட்பு. ('கிழமை' ஆகுபெயர். 'கெழுதகைமை' என வருவனவும் அது. உரிமையால் செய்வனவாவன, கருமமாயின செய்யுங்கால் கேளாது செய்தல், கெடும்வகை செய்தல், தமக்கு வேண்டியன தாமே கோடல், பணிவு அச்சங்கள் இன்மை என்றிவை முதலாயின. சிதைத்தல் - விலக்கல். இதனான், 'பழைமையாவது காலம்சென்றதன்று, இப்பெற்றித்தாய நட்பு' என்பது கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
பழைமை என்று சொல்லப்படுவதன் பொருள் என்ன என்றால், நெடுங்கால நண்பர் நம்மீது உரிமை எடுத்துக் கொண்டு பிழைபட நடந்தாலும் அதைப் பொருட்படுத்தாத நட்பு எனலாம்.