குறள் 771:
என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்நின்று கல்நின் றவர்.
Ye foes stand not before my lord for many a one Who did my lord withstand, now stands in stone
அதிகாரம் - 78 - படைச்செருக்கு
மு.வரதராசன் விளக்கம்
பகைவரே! என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நிற்காதீர்கள், என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நின்று கல்வடிவாய் நின்றவர் பலர்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
போர்க்களத்து வீரன் ஒருவன், "பகைவர்களே என் தலைவனை எதிர்த்து நிற்காதீர்; அவனை எதிர்த்து நடுகல்லாய்ப் போனவர்கள் பலர்"என முழங்குகிறான்.
பரிமேலழகர் விளக்கம்
தெவ்விர் என் ஐ முன் நின்று கல் நின்றவர் பலர் - பகைவீர்,இன்று இங்கு என் தலைவன் எதிர் போரேற்று நின்று அவன் வேல்வாய் வீழ்ந்து பின் கல்லின்கண்ணே நின்ற வீரர் பலர்; என் ஐ முன் நில்லன்மின் - நீவிர் அதன்கணின்றி நும் உடற்கண் நிற்றல் வேண்டின் என் தலைவனெதிர் போரேற்று நிற்றலை ஒழிமின். ('என் ஐ' எனத் தன்னோடு தொடர்புபடுத்துக் கூறினமையின், அவன் வேல்வாய் வீழ்தல் பெற்றாம். கல் - நடுகல். 'நம்பன் சிலை வாய் நடக்குங்கணைமிச்சில் அல்லால் - அம்பொன் முடிப்பூண் அரசுமிலை',(சீவக.காந்தர்வ.317) என, பதுமுகன் கூறினாற் போல ஒரு வீரன், தன் மறம் அரசன்மேல் வைத்துக் கூறியவாறு. இப்பாட்டு 'நெடுமொழி வஞ்சி'.(பு.வெ.மா.வஞ்சி.12)
சாலமன் பாப்பையா விளக்கம்
பகைவர்கேள! என் அரசின் முன்னே போரிட நிற்காதீர்; உங்களைப் போலவே இதற்கு முன்பு பலர் நின்றனர்; எல்லாம் மறைந்து இப்போது நடுகல்லில் சிலையாக நிற்கின்றனர்.