குறள் 770:
நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்.
Though men abound, all ready for the war, No army is where no fit leaders are
அதிகாரம் - 77 - படைமாட்சி
மு.வரதராசன் விளக்கம்
நெடுங்காலமாக நிலைத்திருக்கும் வீரர் பலரை உடையதே ஆனாலும், தலைமைதாங்கும் தலைவர் இல்லாத போது படைக்குப் பெருமை இல்லையாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
உறுதிவாய்ந்த வீரர்களை அதிகம் உடையதாக இருந்தாலும் தலைமை தாங்கும் தலைவர்கள் இல்லாவிட்டால் அந்தப் படை நிலைத்து நிற்க முடியாது.
பரிமேலழகர் விளக்கம்
நிலை மக்கள் சால உடைத்து எனினும் - போரின்கண் நிலையுடைய வீரரை மிக உடைத்தே யாயினும்; தலைமக்கள் இல்வழித் தானை இல் - தனக்குத் தலைவராகிய வீரர் இல்லாதவழித் தானை நில்லாது. (படைத்தலைவர் நிலையுடையரன்றிப் போவாராயின், காண்போர் இல்லெனப் பொராது தானும் போம் என்பார், 'தலைமக்கள் இல் வழி இல்' என்றார். இவை மூன்று பாட்டானும் முறையே படைத்தகையின்மையானும் அரசன் கொடைத் தாழ்வுகளானும், தலைவர் இன்மையானும் தாழ்வு கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
சிறந்த வீரர்கள் அதிகம் இருந்தாலும், படைக்கு நல்ல தலைவன் இல்லை என்றால் அந்தப் படை போரில் நிலைத்து நிற்காது.