குறள் 724:

கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்.

What you have learned, in penetrating words speak out before The learn'd; but learn what men more learn'd can teach you more
அதிகாரம் - 73 - அவையஞ்சாமை
மு.வரதராசன் விளக்கம்
கற்றவரின் முன் தான் கற்றவைகளை அவருடைய மனதில் பதியுமாறு சொல்லி, மிகுதியாகக் கற்றவரிடம் அம்மிகுதியான கல்வியைக் அறிந்து கொள்ள வேண்டும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
அறிஞர்களின் அவையில் நாம் கற்றவைகளை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு எடுத்துச் சொல்லி நம்மைவிட அதிகம் கற்றவரிடமிருந்து மேலும் பலவற்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
பரிமேலழகர் விளக்கம்
கற்றார்முன் கற்ற செலச்சொல்லிச் - பல நூல்களையும் கற்றார் அவைக்கண் தாம் கற்றவற்றை அவர்மனம் கொள்ளுமாற்றாற் சொல்லி; தாம் கற்ற மிக்க மிக்காருள் கொளல் - அவற்றின் மிக்க பொருள்களை அம்மிக்க கற்றாரிடத்து அறிந்துகொள்க (எல்லாம் ஒருவற்குக் கற்றல் கூடாமையின், வேறு வேறாய கல்வியுடையார் பலர் இருந்த அவைக்கண் தாம் கற்றவற்றை அவர்க்கு ஏற்பச் சொல்லுக, சொல்லவே, அவரும்அவையெல்லாம் சொல்லுவர் ஆகலான், ஏனைக் கற்கப்பெறாதன கேட்டறியலாம் என்பதாயிற்று. இதனால் அவனது ஒருசார்பயன் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
பலதுறை நூல்களையும் கற்றவர் அவையில், அவர்கள் மனங் கொள்ளுமாறு, தான் கற்றவற்றை எல்லாம் சொல்லுக; தான் கற்றவற்றிற்கும் மேலானவற்றை மிகவும் கற்றவரிடமிருந்து அறிந்து கொள்க.