குறள் 723:

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்.

Many encountering death in face of foe will hold their ground; Who speak undaunted in the council hall are rarely found
அதிகாரம் - 73 - அவையஞ்சாமை
மு.வரதராசன் விளக்கம்
பகைவர் உள்ள போர்க்களத்தில் (அஞ்சாமல் சென்று) சாகத் துணிந்தவர் உலகத்தில் பலர், கற்றவரின் அவைக்களத்தில் பேச வல்லவர் சிலரே.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
அமர்க்களத்தில் சாவுக்கும் அஞ்சாமல் போரிடுவது பலருக்கும் எளிதான செயல், அறிவுடையோர் நிறைந்த அவைக்களத்தில் அஞ்சாமல் பேசக்கூடியவர் சிலரேயாவர்.
பரிமேலழகர் விளக்கம்
பகையகத்துச் சாவார் எளியர் - பகையிடை அஞ்சாது புக்குச் சாவவல்லார் உலகத்துப் பலர்; அவையகத்து அஞ்சாதாவர் அரியர் - அவையிடை அஞ்சாது புக்குச் சொல்ல வல்லார் சிலர். ('அஞ்சாமை', 'சாவார்' என்பதனோடும் கூட்டி, அதனால் 'சொல்ல வல்லார்' என்பது வருவித்து உரைக்கப்பட்டது. இவை மூன்று பாட்டானும் அவை அஞ்சாரது சிறப்புக் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
பகைவர்களுக்கிடையே பயப்படாமல் புகுந்து சாவோர் பலர் உண்டு;பேசுவோர் சிலரேயாவார்.