குறள் 71:

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.

And is there bar that can even love restrain? The tiny tear shall make the lover's secret plain
அதிகாரம் - 8 - அன்புடைமை
மு.வரதராசன் விளக்கம்
அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே இருக்கும் அன்பைப் ) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது. அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டு விடும்.
பரிமேலழகர் விளக்கம்
அன்பிற்கும் அடைக்கும் தாழ் உண்டோ - அன்பிற்கும் பிறர் அறியாமல் அடைத்து வைக்கும் தாழ் உளதோ?; ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும் -தம்மால் அன்பு செய்யப்பட்டாரது துன்பம் கண்டுழி அன்புடையார் கண்பொழிகின்ற புல்லிய கண்ணீரே உள்நின்ற அன்பினை எல்லாரும் அறியத்தூற்றும் ஆதலான். (உம்மை சிறப்பின்கண் வந்தது. ஆர்வலரது புன்மை. கண்ணீர்மேல் ஏற்றப்பட்டது. காட்சியளவைக்கு எய்தாதாயினும் அனுமான அளவையான் வெளிப்படும் என்பதாம். இதனால் அன்பினது உண்மை கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
அன்பிற்கும் கூடப் பிறர் அறியாமல் தன்னை மூடி வைக்கும் கதவு உண்டோ? இல்லை. தம்மால் அன்பு செய்யப்பட்டவரின் துன்பத்தைக் காணும்போது வடியும் கண்ணீரே அன்பு உள்ளத்தைக் காட்டிவிடும்.