குறள் 70:

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.

To sire, what best requital can by grateful child be done? To make men say, 'What merit gained the father such a son?'
அதிகாரம் - 7 - புதல்வரைப் பெறுதல்
மு.வரதராசன் விளக்கம்
மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
"ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெரும்பேறு",என்று ஒரு மகன் புகழப் படுவதுதான், அவன் தன்னுடையதந்தைக்குச் செய்யக் கூடிய கைம்மாறு எனப்படும்.
பரிமேலழகர் விளக்கம்
தந்தைக்கு மகன் ஆற்றும் உதவி - கல்வியுடையனாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறாவது; இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல் - தன்னறிவும் ஒழுக்கமுங் கண்டார் இவன் தந்தை இவனைப் பெறுதற்கு என்ன தவஞ் செய்தான் கொல்லோ வென்று சொல்லுஞ் சொல்லை நிகழ்த்துதல். ('சொல்' லென்பது நிகழ்த்துதலாகிய தன் காரணந்தோன்ற நின்றது.நிகழ்த்துதல் - அங்ஙனஞ் சொல்ல வொழுகல்.இதனாற் புதல்வன் கடன் கூறப்பட்டது)
சாலமன் பாப்பையா விளக்கம்
தன்னைக் கல்வி அறிவு உடையவனாய் ஆளாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறு, பிள்ளையின் ஒழுக்கத்தையும் அறிவையும் கண்டவர், இப்பிள்ளையைப் பெறுவதற்கு இவன் தகப்பன் என்ன தவம் செய்தானோ என்று சொல்லும் சொல்லைப் பெற்றுத் தருவதே.