குறள் 702:

ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்.

Undoubting, who the minds of men can scan, As deity regard that gifted man
அதிகாரம் - 71 - குறிப்பறிதல்
மு.வரதராசன் விளக்கம்
ஐயப்படாமல் மனத்தில் உள்ளதை உணரவல்லவனை (அவன் மனிதனே ஆனாலும்) தெய்வத் தோடு ஒப்பாக கொள்ள வேண்டும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஒருவன் மனத்தில் உள்ளதைத் தெளிவாக உணர்ந்து கொள்ளக்கூடிய சக்தி தெய்வத்திற்கே உண்டு என்று கூறினால், அந்தத் திறமை படைத்த மனிதனையும் அத்தெய்வத்தோடு ஒப்பிடலாம்.
பரிமேலழகர் விளக்கம்
அகத்தது ஐயப்படாது உணர்வானை - ஒருவன் மனத்தின்கண் நிகழ்வதனை ஐயப்படாது ஒருதலையாக உணர வல்லானை; தெய்வத்தொடு ஒப்பக்கொளல் - மகனேயாயினும், தெய்வத்தோடு ஒப்ப நன்கு மதிக்க.(உடம்பு முதலியவற்றான் ஒவ்வானாயினும், பிறர்நினைத்தது உணரும் தெய்வத் தன்மையுடைமையின், 'தெய்வத்தொடுஒப்ப' என்றார்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
அடுத்தவனின் மனக்கருத்தைச் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் கண்டுகொள்ளும் ஆற்றல் உள்ளவனைத் தெய்வத்திற்குச் சமமாக மதிக்க வேண்டும்.