குறள் 701:
கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி.
Who knows the sign, and reads unuttered thought, the gem is he, Of earth round traversed by the changeless sea
அதிகாரம் - 71 - குறிப்பறிதல்
மு.வரதராசன் விளக்கம்
ஓருவர் சொல்லாமலே அவறுடைய முகத்தை நோக்கி அவர் கருதிய குறிப்பை அறிகின்றவன் எப்போதும் உலகத்திற்க்கு ஓர் அணிகலன் ஆவான்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஒருவர் எதுவும் பேசாமலிருக்கும் போதே அவர் என்ன நினைக்கிறார் என்பதை முகக்குறிப்பால் உணருகிறவன் உலகத்திற்கு அணியாவான்.
பரிமேலழகர் விளக்கம்
குறிப்பு கூறாமை நோக்கி அறிவான் - அரசனால் குறித்த கருமத்தை அவன் கூறவேண்டா வகை அவன் முகத்தானும் கண்ணானும் நோக்கி அறியும் அமைச்சன்; எஞ்ஞான்றும் மாறாநீர் வையக்கு அணி - எஞ்ஞான்றும் வற்றாத நீரால் சூழப்பட்ட வையத்துள்ளார்க்கு ஓர் ஆபரணமாம். (ஒட்பமுடையனாய் எல்லார்க்கும் அழகுசெய்தலான், 'வையக்கு அணி' என்றார். குறிப்பும் வையமும் ஆகுபெயர். வையத்திற்கு என்பது விகாரப்பட்டு நின்றது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
ஒருவன் வாயால் சொல்லாமல் இருக்க, அவனுடைய முகத்தையும் கண்ணையும் பார்த்தே அவன் மனக்கருத்தை அறிந்து கொள்பவன், எப்போதும் வற்றாத கடலால் வளைக்கப்பட்ட இவ்வுலகத்தவர்க்கு ஆபரணம் போன்றவன்.