குறள் 670:

எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு.

The world desires not men of every power possessed, Who power in act desire not,- crown of all the rest
அதிகாரம் - 67 - வினைத்திட்பம்
மு.வரதராசன் விளக்கம்
வேறு எத்தகைய உறுதி உடையவராக இருந்தாலும், செய்யும் தொழிலில் உறுதி இல்லாதவரை உலகம் விரும்பிப் போற்றாது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
எவ்வளவுதான் வலிமையுடையவராக இருப்பினும் அவர் மேற்கொள்ளும் செயலில் உறுதியில்லாதவராக இருந்தால், அவரை உலகம் மதிக்காது.
பரிமேலழகர் விளக்கம்
வினைத்திட்பம் வேண்டாரை - வினைத்திட்பத்தை இது நமக்குச் சிறந்தது என்று கொள்ளாத அமைச்சரை; எனைத்திட்பம் எய்தியக்கண்ணும் - ஒழிந்த திட்பங்கள் எல்லாம் உடையராயவிடத்தும்; வேண்டாது உலகு - நன்கு மதியார் உயர்ந்தோர். (மனத்தின்கண் திட்பமில்லாதார்க்குப் படை, அரண், நட்பு முதலியவற்றின் திட்பங்களெல்லாம் உளவாயினும், வினை முடியாதாம், ஆகவே, அவையெல்லாம் கெடும் என்பது பற்றி 'உலகு வேண்டாது' என்றார். இதனான் வினைத்திட்பமில்லாதாரது இழிபு கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
எத்தனை வகை உறுதி உடையவராக இருந்தாலும் செயல் உறுதி இல்லாதவரை உயர்ந்தோர் மதிக்கமாட்டார்.