குறள் 669:
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை.
Though toil and trouble face thee, firm resolve hold fast, And do the deeds that pleasure yield at last
அதிகாரம் - 67 - வினைத்திட்பம்
மு.வரதராசன் விளக்கம்
(முடிவில்) இன்பம் கொடுக்கும் தொழிலைச் செய்யும் போது துன்பம் மிக வந்த போதிலும் துணிவு மேற்கொண்டு செய்து முடிக்க வேண்டும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
இன்பம் தரக்கூடிய செயல் என்பது, துன்பம் வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் துணிவுடன் நிறைவேற்றி முடிக்கக் கூடியதேயாகும்.
பரிமேலழகர் விளக்கம்
துன்பம் உறவரினும் - முதற்கண் மெய்ம்முயற்சியால் தமக்குத் துன்பம் மிக வருமாயினும்; இன்பம் பயக்கும் வினை துணிவு ஆற்றிச் செய்க - அது நோக்கித் தளராது முடிவின்கண் இன்பம் பயக்கும் வினையைத் திட்பமுடையராய்ச் செய்க.(துணிவு - கலங்காமை. அஃதுடையார்க்கு அல்லது கணிகமாய முயற்சித்துன்பம் நோக்காது நிலையுதலுடைய பரிணாமஇன்பத்தை நோக்கிச் செய்தல் கூடாமையின், 'துணிவாற்றிச்செய்க' என்றார். இவை இரண்டு பாட்டானும் அவர் வினைசெய்யுமாறு கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
ஒரு செயலைச் செய்யும்போது துன்பம் அதிகமாக வந்தாலும் முடிவில் இன்பம் தரும் அச்செயலை மனம் தளராமல் செய்க.