குறள் 640:

முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர்.

For gain of end desired just counsel nought avails To minister, when tact in execution fails
அதிகாரம் - 64 - அமைச்சு
மு.வரதராசன் விளக்கம்
(செயல்களைச் முடிக்கும்) திறன் இல்லாதவர், முன்னே எண்ணி வைத்திருந்தும் (செய்யும் போது) குறையானவைகளையேச் செய்வர்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
முறைப்படித் தீட்டப்படும் திட்டங்கள்கூடச் செயல் திறன் இல்லாதவர்களிடம் சிக்கினால் முழுமையாகாமல் முடங்கித்தான் கிடக்கும்.
பரிமேலழகர் விளக்கம்
முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர் - செய்யப்படும் வினைகளை முன் அடைவுபட எண்ணி வைத்தும், செய்யுங்கால் அவை முடிவிலவாகவே செய்யாநிற்பர்; திறப்பாடு இலாதவர் - முடித்தற்கு ஏற்ற கூறுபாடு இல்லாதார். (அக்கூறுபாடாவன: வந்த இடையூறுகட்கு ஏற்ற பரிகாரம் அறிந்து செய்தலும், தாம் திண்ணியராதலுமாம். பிழையாமல் எண்ண வல்லராய் வைத்தும் செய்து முடிக்கமாட்டாரும் உளர் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் அமைச்சருள் விடப்படுவாரது குற்றம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
செயல்திறம் இல்லாத அமைச்சர், செய்ய வேண்டியவற்றை முறையாக எண்ணி வைத்திருந்தாலும், அவற்றைச் செய்யும்போது அரைகுறையாகவே செய்வார்.