குறள் 639:
பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்.
A minister who by king's side plots evil things Worse woes than countless foemen brings
அதிகாரம் - 64 - அமைச்சு
மு.வரதராசன் விளக்கம்
தவறான வழிகளை எண்ணி கூறுகின்ற அமைச்சனை விட எழுபது கோடி பகைவர் பக்கத்தில் இருந்தாலும் நன்மையாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
தவறான வழிமுறைகளையே சிந்தித்துச் செயல்படுகிற அமைச்சர் ஒருவர் அருகிலிருப்பதை விட எழுபது கோடி எதிரிகள் பக்கத்தில் இருப்பது எவ்வளவோ மேலாகும்.
பரிமேலழகர் விளக்கம்
பக்கத்துள் பழுது எண்ணும் மந்திரியின் - பக்கத்திருந்து பிழைப்ப எண்ணும் அமைச்சன் ஒருவனில்; ஓரெழுபதுகோடி தெவ்உறும் - அரசனுக்கு எதிர் நிற்பார் ஓரெழுபதுகோடி பகைவர் உறுவர். (எழுபது கோடி என்றது மிகப் பலவாய எண்ணிற்கு ஒன்று காட்டியவாறு. வெளிப்பட நிற்றலான் அவர் காக்கப்படுவர்; இவன் உட்பகையாய் நிற்றலான் காக்கப்படான் என்பதுபற்றி இவ்வாறு கூறினார். 'எழுபது கோடி மடங்கு நல்லர்' என்று உரைப்பாரும், 'எழுபது கூறுதலை' என்று பாடம் ஓதுவாரும் உளர்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
தன் கட்சிக்காரராய் அருகிலேயே இருந்தும், நாட்டு நலனை எண்ணாமல் தன்னலமே எண்ணும் அமைச்சர், எழுபது கோடி எதிர்கட்சிக்காரருக்குச் சமம் ஆவார்.