குறள் 612:
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.
In action be thou, 'ware of act's defeat; The world leaves those who work leave incomplete
அதிகாரம் - 62 - ஆள்வினையுடைமை
மு.வரதராசன் விளக்கம்
தொழிலாகிய குறையைச் செய்யாமல் கைவிட்டவரை உலகம் கைவிடும், ஆகையால் தொழில் முயற்சி இல்லாதிருத்தலை ஒழிக்க வேண்டும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதனை முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும். இல்லையேல் அரைக்கிணறு தாண்டிய கதையாகி விடும்.
பரிமேலழகர் விளக்கம்
வினைக்குறை தீர்ந்தாரின் உலகு தீர்ந்தன்று - வினையாகிய குறையைச் செய்யாது விட்டாரை உலகம் விட்டது; வினைக்கண் வினைகெடல் ஓம்பல் - அதனான் செய்யப்படும் வினைக்கண் தவிர்ந்திருத்தலை ஒழிக. (குறை - இன்றியமையாப் பொருள். அது 'பயக்குறை இல்லைத் தாம்வாழும் நாளே' (புறநா.188) என்பதனானும் அறிக. இதற்கு 'வினை செய்ய வேண்டும் குறையை நீங்கினாரின் நீங்கிற்று' என்று உரைப்பாரும் உளர்.
சாலமன் பாப்பையா விளக்கம்
ஒரு செயலைச் செய்யும்போதே, அதைத் தொடர்ந்து செய்வது கடினம் என எண்ணிச் செய்யாது விட்டுவிடாதே. அவ்வாறு விட்டுவிடுபவரை இந்த உலகமும் விட்டுவிடும்.