குறள் 611:

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.

Say not, 'Tis hard', in weak, desponding hour, For strenuous effort gives prevailing power
அதிகாரம் - 62 - ஆள்வினையுடைமை
மு.வரதராசன் விளக்கம்
இது செய்வதற்கு அருமையாகாது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும், அதைச் செய்வதற்க்குத் தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும்,
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.
பரிமேலழகர் விளக்கம்
அருமை உடைத்து என்று அசாவாமை வேண்டும் - தம் சிறுமை நோக்கி, நாம் இவ்வினைமுடித்தல் அருமையுடைத்து என்று கருதித் தளராதொழிக; பெருமை முயற்சி தரும் - அது முடித்தற்கேற்ற பெருமையைத் தமக்கு முயற்சி உண்டாக்கும். ('சிறுமை நோக்கி' என்பது பெருமை தரும் என்றதனானும், 'வினை முடித்தல்' என்பது அதிகாரத்தானும் வருவிக்கப்பட்டன. விடாது முயலத் தாம் பெரியராவர்; ஆகவே அரியனவும் எளிதின் முடியும் என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நம்மால் இதைச் செய்யமுடியாது என்று மனம் தளரக்கூடாது. அதைச் செய்து முடிக்கும் ஆற்றலை முயற்சி தரும்.