குறள் 589:
ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும்.
One spy must not another see: contrive it so; And things by three confirmed as truth you know
அதிகாரம் - 59 - ஒற்றாடல்
மு.வரதராசன் விளக்கம்
ஓர் ஒற்றனை மற்றோர் ஒற்றன் அறியாதபடி ஆள வேண்டும், அவ்வாறு ஆளப்பட்ட ஒற்றர் மூவரின் சொல் ஒத்திருந்தால் அவை உண்மை எனத் தெளியப்படும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஓர் ஒற்றரை மற்றோர் ஒற்றர் அறியமுடியாதபடி மூன்று ஒற்றர்களை இயங்கவைத்து அம்மூவரும் சொல்வது ஒத்திருந்தால் அது உண்மையெனக் கொள்ளலாம்.
பரிமேலழகர் விளக்கம்
ஒற்று ஒற்று உணராமை ஆள்க - ஒற்றாரையாளும் இடத்து ஒருவனையொருவன் அறியாமல் ஆள்க; உடன் மூவர் சொல் தொக்க தேறப்படும் - அங்ஙனம் ஆண்ட ஒற்றர் மூவரை ஒரு பொருள்மேல் வேறுவேறு விட்டால் அம்மூவர் சொல்லும் பயனால் ஒத்தனவாயின், அது மெய் என்று தெளியப்படும். ('ஆயின்' என்பது வருவிக்கப்பட்டது. ஒருவனையொருவன் அறியின் தம்முள் இயைந்து ஒப்பக்கூறுவர் ஆகலின், 'உணராமை ஆள்க' என்றும், மூவர்க்கும் நெஞ்சு ஒற்றுமைப் படுதலும், பட்டால் நீடு நிற்றலும் கூடாமையின் 'தேறப்படும்' என்றும் கூறினார்.இதனானே அஃது ஒத்திலவாயின் பின்னும் ஆராய்க என்பதூஉம்பெற்றாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
ஒற்றரை இயக்கும்போது ஓர் ஒற்றரை இன்னுமோர் ஒற்றர் அறிந்துகொள்ளாதபடி இயக்குக; ஒரு காரியத்திற்கு மூவர் சொல்லும் ஒன்றுபோலவே இருந்தாலும் அதையும் ஆய்ந்து பிறகு ஏற்றுக்கொள்க.