குறள் 588:
ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்.
Spying by spies, the things they tell To test by other spies is well
அதிகாரம் - 59 - ஒற்றாடல்
மு.வரதராசன் விளக்கம்
ஓர் ஒற்றன் மறைந்து கேட்டுத் தெரிவித்தச் செய்தியையும் மற்றோர் ஒற்றனால் கேட்டு வரச் செய்து ஒப்புமை கண்டபின் உண்மை என்றுக் கொள்ள வேண்டும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஓர் உளவாளி, தனது திறமையினால் அறிந்து சொல்லும் செய்தியைக் கூட மற்றோர் உளவாளி வாயிலாகவும் அறிந்து வரச் செய்து, இரு செய்திகளையும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகே அது, உண்மையா அல்லவா என்ற முடிவுக்கு வரவேண்டும்
பரிமேலழகர் விளக்கம்
ஒற்று ஒற்றித் தந்த பொருளையும் - ஒரொற்றன் ஒற்றிவந்து அறிவித்த காரியந்தன்னையும்; மற்றும் ஓர் ஒற்றனால் ஒற்றிக் கொளல் - பிறனோர் ஒற்றனாலும் ஒற்றுவித்து ஒப்புமை கண்டுகொள்க. (ஒற்றப்பட்டாரோடு ஒத்து நின்று மாறுபடக் கூறலும் கூடுமாகலின், ஒருவன் மாற்றம் தேறப்படாது என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
ஓர் ஒற்றர் கொண்டு வந்த செய்தியை இன்னும் ஓர் ஒற்றர் தரும் செய்தியோடு சரி பார்த்துக் கொள்க.