குறள் 583:
ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்தது இல்.
By spies who spies, not weighing things they bring, Nothing can victory give to that unwary king
அதிகாரம் - 59 - ஒற்றாடல்
மு.வரதராசன் விளக்கம்
ஒற்றரால் (நாட்டு நிகழ்ச்சிகளை) அறிந்து அவற்றின் பயனை ஆராய்ந்துணராத அரசன் வெற்றிபெறத்தக்க வழி வேறு இல்லை.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
நாட்டு நிலவரத்தை ஒற்றர்களைக் கொண்டு அறிந்து அதன் விளைவுகளை ஆராய்ந்து நடந்திடாத அரசின் கொற்றம் தழைத்திட வழியே இல்லை.
பரிமேலழகர் விளக்கம்
ஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரியா மன்னவன் - ஒற்றினானே எல்லார்கண்ணும் நிகழ்ந்தவற்றை ஒற்றுவித்து அவற்றான் எய்தும் பயனை ஆராயாத அரசன்; கொற்றம் கொளக் கிடந்தது இல் - வென்றியடையக் கிடந்தது வேறொரு நெறி இல்லை. (அந்நிகழ்ந்தனவும் பயனும் அறியாது பகைக்கு எளியனாதல் பிறிதின் தீராமையின் 'கொற்றம் கொளக் கிடந்தது இல்' என்றார். இதற்குக் கொளக்கிடந்ததொரு வென்றி இல்லை என்று உரைப்பினும் அமையும். இதனான் அத்தொழில் செய்யாதவழி வரும் குற்றம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
எல்லார் இடத்தும் நிகழ்வனவற்றை ஒற்றரைக் கொண்டு அறிந்து, நடப்பை தெரிந்து கொள்ளாத ஆட்சி, நிலைத்து வெற்றி பெற வேறொரு வழியே இல்லை.