குறள் 582:
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்.
Each day, of every subject every deed, 'Tis duty of the king to learn with speed
அதிகாரம் - 59 - ஒற்றாடல்
மு.வரதராசன் விளக்கம்
எல்லாரிடத்திலும் நிகழ்கின்றவை எல்லாவற்றையும் எக்காலத்திலும் (ஒற்றரைக் கொண்டு) விரைந்து அறிதல் அரசனுக்குரிய தொழிலாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
நண்பர், பகைவர், நடுநிலையாளர் ஆகிய எல்லாரிடத்திலும் நிகழும் எல்லா நிகழ்வுகளையும், எல்லாக் காலங்களிலும் ஒற்றரைக் கொண்டு விரைவாக அறிந்து கொள்வது அரசுக்குரிய கடமையாகும்.
பரிமேலழகர் விளக்கம்
எல்லார்க்கும் நிகழ்பவை எல்லாம் எஞ்ஞான்றும் வல்அறிதல் - எல்லார்கண்ணும் நிகழ்வன எல்லாவற்றையும் நாள்தோறும் ஒற்றான் விரைந்தறிதல்; வேந்தன் தொழில் - அரசனுக்கு உரிய தொழில். ('எல்லார்க்கும்' என்றது மூன்று திறத்தாரையும். நான்காவது ஏழாவதன் பொருட்கண் வந்தது. 'நிகழ்வன எல்லாம்' என்றது, நல்லவும் தீயவுமாய சொற்களையும், செயல்களையும். அவை நிகழ்ந்த பொழுதே அவற்றிற்குத் தக்க அளியாகத் தெறலாகச் செய்யவேண்டுதலின் 'வல்லறிதல்' என்றும், இவ்விருதொழிற்கும் அறிதல் காரணம் ஆதலின், அதனையே உபசார வழக்கால் 'தொழில்' என்றும் கூறினார். 'ஒற்றான்' என்பது அதிகாரத்தான் வந்தது. இதனான் ஒற்றினாய அறன் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
பகைவர், நண்பர், பொதுவானவர் என எல்லாரிடத்திலும் நிகழ்வான எல்லாவற்றையும், எப்போதும் ஒற்றால் விரைந்து அறிந்து கொள்ள வேண்டியது அரசின் வேலை.