குறள் 552:
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.
As 'Give' the robber cries with lance uplift, So kings with sceptred hand implore a gift
அதிகாரம் - 56 - கொடுங்கோன்மை
மு.வரதராசன் விளக்கம்
ஆட்சிக்குறிய கோலை ஏந்தி நின்ற அரசன் குடிகளைப் பொருள் கேட்டல் , போகும் வழியில் கள்வன் கொடு என்று கேட்பதைப் போன்றது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக்காரனின் மிரட்டலைப் போன்றது.
பரிமேலழகர் விளக்கம்
வேலொடு நின்றான் - ஆறலைக்கும் இடத்துத்தனியே வேல் கொண்டு நின்ற கள்வன், இடு என்றது போலும் - ஆறுசெல்வானை 'நின் கைப்பொருள் தா' என்று வேண்டுதலோடுஒக்கும், கோலொடு நின்றான் இரவு - ஒறுத்தல் தொழிலோடு நின்றஅரசன் குடிகளைப் பொருள் வேண்டுதல். ('வேலொடு நின்றான்' என்றதனால் பிறரொடு நில்லாமையும், 'இரவு' என்றதனால்இறைப்பொருள் அன்மையும் பெற்றாம், தாராக்கால்ஒறுப்பல் என்னும் குறிப்பினன் ஆகலின் இரவாற் கோடலும் கொடுங்கோன்மைஆயிற்று,இவை இரண்டு பாட்டானும் கொடுங்கோன்மையதுகுற்றம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
தண்டிக்கும் இயல்போடு ஆட்சியாளன் தன் குடிகளிடம் வரி கேட்பது, ஆயுதத்தைப் பிடித்துக் கொண்டு நெடுவழிப் பயணிகளிடம் பணத்தைப் போடு என்று மிரட்டுவதற்குச் சமம்.