குறள் 498:
சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்.
If lord of army vast the safe retreat assail Of him whose host is small, his mightiest efforts fail
அதிகாரம் - 50 - இடனறிதல்
மு.வரதராசன் விளக்கம்
சிறிய படை உடையவனுக்குத் தக்கதாக உள்ள இடத்தில் பொருந்தி நின்றால், பெரிய படை உடையவன் தன் ஊக்கம் அழிவான்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
சிறிய படை என்றாலும் அது தனக்குரிய இடத்தில் இருந்து போரிட்டால் பெரிய படையை வென்று விட முடியும்.
பரிமேலழகர் விளக்கம்
உறுபடையான் - பெரும்படையுடைய அரசன், சிறுபடையான் செல் இடம் சேரின் - ஏனைச் சிறுபடையானை அழித்தல் கருதி அவன் புகலைச் சென்று சாருமாயின், ஊக்கம் அழிந்து விடும் - அவனால் தன் பெருமை அழியும். ('செல் இடம்' அவனுக்குச் செல்லும் இடம். 'அழிந்துவிடும்' என்பது 'எழுந்திருக்கும்' என்றாற்போல் ஒரு சொல் ஊக்கத்தின் அழிவு உடையான்மேல் ஏற்றப்பட்டது. தன் படைப்பெருமை நோக்கி , இடன் நோக்காது செல்வன் ஆயின், அஃது அப்படைக்கு ஒருங்குசென்று வினைசெயல் ஆகாமையானாகப் பயிற்சியின்மையானாக,அப்பெருமையால் பயன் இன்றித் தான் அழிந்துவிடும் என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
பெரிய படையை உடையவன், சிறிய படையை உடையவன் ஓடி இருக்கும் இடந்தேடிப் போனால், போனவனின் பெருமை அழியும்.