குறள் 497:

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின்.

Save their own fearless might they need no other aid, If in right place they fight, all due provision made
அதிகாரம் - 50 - இடனறிதல்
மு.வரதராசன் விளக்கம்
(செய்யும் வழிவகைகமைக்) குறைவில்லாமல் எண்ணித் தக்க இடத்தில் பொருந்திச் செய்தால், அஞ்சாமை அல்லாமல் வேறு துணை வேண்டியதில்லை.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஒரு செயலுக்குரிய வழி முறைகளைக் குறையின்றிச் சிந்தித்துச் செய்யுமிடத்து, அஞ்சாமை ஒன்றைத் தவிர, வேறு துணை தேவையில்லை.
பரிமேலழகர் விளக்கம்
எஞ்சாமை எண்ணி இடத்தான் செயின் - பகையிடத்து வினை செய்யும் திறங்களை எல்லாம் ஒழியாது எண்ணி அவற்றை அரசர் இடத்தோடு பொருந்தச் செய்வராயின், அஞ்சாமை அல்லால் துணை வேண்டா - அச்செயற்குத் தம்திண்மை அல்லது பிறிதொரு துணை வேண்டுவதில்லை. ('திண்ணியராய் நின்று செய்துமுடித்தலே வேண்டுவது அல்லது துணை வேண்டா' என்றார், அவ் வினை தவறுவதற்கு ஏது இன்மையின். இவை மூன்று பாட்டானும் வினை செய்தற்கு ஆம் இடன் அறிதல் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
செய்யும் செயலை இடைவிடாமல் எண்ணி, இடம் அறிந்து செயதால், பகைக்குப் பயப்படாத மனஉறுதி போதும்; வேறு துணை தேவை இல்லை.