குறள் 452:
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு.
The waters' virtues change with soil through which they flow; As man's companionship so will his wisdom show
அதிகாரம் - 46 - சிற்றினஞ்சேராமை
மு.வரதராசன் விளக்கம்
சேர்ந்த நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மையுடையதாகும், அதுபோல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீரானது வேறுபட்டு அந்த நிலத்தின் தன்மையை அடைந்துவிடும். அதுபோல மக்களின் அறிவும், தாங்கள் சேர்ந்த இனத்தின் தன்மையைப் பெற்றதாகிவிடும்.
பரிமேலழகர் விளக்கம்
நிலத்து இயல்பான் நீர் திரிந்து அற்றாகும் - தான் சேர்ந்த நிலத்தினது இயல்பானே நீர் தன் தன்மை திரிந்து அந்நிலத்தின் தன்மைத்தாம், மாந்தர்க்கு இனத்து இயல்பு அறிவு (திரிந்து) அதாகும் -அதுபோல மாந்தர்க்குத் தாம் சேர்ந்த இனத்தின் இயல்பானே அறிவும் தன் தன்மை திரிந்து அவ்வினத்தின் தன்மைத்தாம். (எடுத்துக்காட்டுவமை: விசும்பின்கண் தன் தன்மைத்தாய நீர் நிலத்தோடு சேர்ந்த வழி, நிறம், சுவை முதலிய பண்புகள் திரிந்தாற்போல, தனி நிலைக்கண் தன் தன்மைத்தாய அறிவு, பிறஇனத்தோடு சேர்ந்தவழிக் காட்சி முதலிய தொழில்கள் திரியும் என, இதனான் அதனது காரணங் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
தான் சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீர் தன் இயல்பை இழந்து, நிலத்தின் இயல்பாகவே மாறிவிடும்; மனிதரின் அறிவும் அவர் சேர்ந்த இனத்தின் இயல்பாகவே ஆகிவிடும்.