குறள் 451:
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.
The great of soul will mean association fear; The mean of soul regard mean men as kinsmen dear
அதிகாரம் - 46 - சிற்றினஞ்சேராமை
மு.வரதராசன் விளக்கம்
பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும், சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக எண்ணித் தழுவிக் கொள்ளும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பெரியோர், கீழ்மக்களின் கூட்டத்தோடு சேரமாட்டார்கள். ஆனால் சிறியோர்களோ இனம் இனத்தோடு சேருமென்பதுபோல் அந்தக் கீழ் மக்கள் கூட்டத்துடன் சேர்ந்து கொள்வார்கள்.
பரிமேலழகர் விளக்கம்
பெருமை சிற்றினம் அஞ்சும் - பெரியோர் இயல்பு சிறிய இனத்தைச் அஞ்சாநிற்கும், சிறுமை தான் சுற்றமாச் சூழ்ந்து விடும் - ஏனைச் சிறியோர் இயல்பு அது சேர்ந்த பொழுதே அதனைத் தனக்குச் சுற்றமாக எண்ணித் துணியும். '(தத்தம் அறிவு திரியுமாறும் , அதனால் தமக்கு வரும் துன்பமும் நோக்கலின், அறிவுடையார் அஞ்சுவர் என்றும், அறிவு ஒற்றுமையான் பிறிது நோக்காமையின், அறிவிலாதார் தமக்குச் சுற்றமாகத் துணிவர் என்றும் கூறினார். பொருளின் தொழில்கள் பண்பின்மேல் நின்றன. இதனான் 'சிறிய இனம் பெரியோர்க்கு' ஆகாது' என்பது கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
தீய குணத்தாரோடு சேரப் பெரியோர் அஞ்சுவர்; சிறியாரோ அவர்களைத் தம் உறவாகவே கருதி விடுவர்.